Wednesday, October 13, 2010

‘எல் ’ ஈன்ற 'Alpha' - A

 ‘எல் ’ ஈன்ற 'Alpha' - A

- முனைவர் கு. அரசேந்திரன்

கிரேக்க - ஆங்கில நெடுங்கணக்கின் வரலாறு தனித்து ஆயத்தக்க வரலாறுடையது. மேலை மொழி வரலாற்றறிஞர்களும் வேர்ச்சொல்லாய்வறிஞர்களும் இதுபற்றி நிரம்ப உரைத்துள்ளனர். இவ்வாய்வறிஞர்களின் ஆய்வுகளில் பெரும்பாலும் ஒத்த கருத்துகளே உள்ளன. எழுத்துகளுக்கு மாற்றாகப் பொனீசியர்கள் (Phoenician) பயன்படுத்தி வந்த உருவ எழுத்துக்களே (hieroglyphs) கிரேக்க-இலத்தீன் வழியாக இன்றைய ஐரோப்பியர்களுக்கு எழுத்துக்களாக வந்து சேர்ந்தன.

Our alphabet was not derived from the Egyptian hieroglyphs. The alphabet came down through the phoenician, Greek and Latin languages into modern European - Wilfred funk.

மொழி, வரலாற்று ஆய்வறிஞர்கள் பொனீசியர்களின் வரலாற்றை இன்னும் ஆய்ந்தவாறே உள்ளனர். இன்றைக்கு  மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர்ச் சிந்துவெளியில் வாழ்ந்த தமிழ் வணிகர்களே இப் பொனீசியர்கள் என பி.தி. சீனிவாச ஐயங்கார், ந.சி. கந்தையா பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். வணிகர் - வணியர் - பனியர்- பொனியர் - phoeniciar என்பதாக இச்சொல் தமிழிலிருந்து திரிந்திருக்க வேண்டும்.

பொனீசியர்கள் பயன்படுத்திய பட எழுத்துகளில் இது வரை B,M,Q  ஆகிய மூன்று எழுத்துக்களின் வரலாற்றை ஆய்ந்து எழுதியுள்ளேன். 'Alpha' எனக் கிரேக்கர்கராலும்  'A ' என ஆங்கிலேயராலும் சொல்லப்படும் சொல்லின், எழுத்தின் வரலாற்றை இப்பொழுது இங்கு ஆய்ந்துரைக்கிறேன்.

Alpha- Beta கிரேக்க  நெடுங்கணக்கின் முதலீரெழுத்துக்கள். இந்த இரண்டினையும் சேர்த்துதான்  alphabet என்று கிரேக்க நெடுங்கணக்கை உரைக்கின்றார்கள்.Alphaவையும் beta வையும் நெடுங்கணக்கில் முதற்கண் வைத்தமைக்கு அறிஞர்கள் தக்க காரணம் கண்டு உரைத்துள்ளார்கள்.

வாழ்க்கையின் முதல் தேவை உணவு. இந்த உணவைப் பெறுதற்கு முதல் துணையாக இருப்பவை காளை மாடுகளும் கால்நடைகளும். ஒருவரின் செல்வமாகவே இவை கருதப்பட்டன. இந்த அடிப்படையில் காளையைக் குறிக்கும்  'Alpha'  சொல்லை A  என்ற அடையாளத்துடன் பொனீசியர்கள் முதற்கண் வைத்தனர். உணவிற்கும் செல்வத்திற்கும் அடுத்த தேவையாகக் குடியிருக்கும் வீடு சிறப்புப் பெறுகிறது. இதன் வழி வீடு குறிக்கும்   'beta'  சொல்லும்  'B' அடையாளமும் இரண்டாவதாக வருகின்றன.
 

The first two letters of the Greek alphabet, alpha and beta, were joined together to form our word alphabet. Each letter of our alphabet, in its early beginning started with a picture or drawing.

It may not have been an accident that the letter A became the first letter of all. In ancient Phoenicia some 3000 years ago the letter A was alph and meant ‘Ox’. It was represented like a V, seemingly for the horns of an ox, and had a slanted bar across it ; but the Greeks latter turned it upside down, which is the way we know it. The ox, of course, served the ancient Phoenicians for food and work and shoes and clothing. A herd of cattle meant wealth to them. This could have been the reason that ox, aleph, or A stands as our first letter.
(Word origins,p.7-8.)

எபிரேய (Hebrew) த்தின் 'aleph'.

பொனீசியர்கள்  ‘(Hebrew)’ என்ற காளையைக் குறிக்கப் பலுக்கியதைக் கிரேக்கர்கள்  'alpha' எனவும் எபிரேயர்கள்  'alef' எனவும் சற்று மாற்றிப் பலுக்கினர். எபிரேயத்திலும்  'alef' அவர்களின் நெடுங்கணக்கின் முதலெழுத்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

Alef- the first letter of the alphabet, called alef = ox, cattle;.

 - Hebrew. Dic.

‘Alp’ சொல்லும் aleph, alpha, alef சொற்களும்:

'alp' சொல்லுடன் காளையைக் குறித்த aleph, alpha, alef  சொற்கள் சொல்லாலும் பொருளாலும் உறவுடையனவாகவே தெரிகின்றன.

Alp-மலை

மேலை இந்தோ - ஐரோப்பிய மொழிகளில்  alp, alps, alpes, alpeis எனப் படிவச் சொற்கள் உள்ளன. இவ்வனைத்திற்கும் மூலப்பொருள்  மலை . எனவே அங்குக் குறிக்கப்படுகின்றன.

Alp- 1. (a) high mountain (b) (the alps) the high range of mountains in Switzerland and adjoining countries (b) growing or found on high mountains.

              Alpine-adj. 1.a. of or relating to high mountains.
                                   b.growing or found on high mountains.
                                2.(Alpine) of or relating to the Alps.

                                n. 1.a plant native to mountain districts.

         2. a plant suited to rock gardens. (Latins Alpinus:)

Alpinist. n. a climber of high mountains, esp in the Alps. (French alpiniste) - C.O.D


‘Alps’ மலையின்  ‘Alps’ உம்  ‘Albion’ இன்  ‘Albus’ உம்.

சேம்பராரின் ஆங்கில வேர்ச்சொல் அகராதி மலை சார்ந்ததைக் குறிக்கும்  ‘alphine’ சொல்லின் வேரை ஆய்ந்த போது அது இந்தோ - ஐரோப்பியம் சாராத வேர்வழியது என்று உரைத்துள்ளது.

Alpine -Middle French alpin, from Latin Alpinus from Alpes, the Alps, ultimately a name of non-Indo European origin.

வெண்குட்ட நோய்க்கு ஆளானவரை அல்லது ஆளான உயிரினத்தை  albino, albus என்ற சொல் குறிக்கும். இச்சொல் வரலாற்றை ஆய்ந்த இடத்தும், சேம்பரார் அகராதி   ‘It is not possible to determine which language was the source of borrowing for the English word’ என்று கூறியுள்ளது.

வெண்பனி மூடிய மலையே  Alps:

ஒளியை, வெண்மையைக் குறித்த தமிழ்ச் சொல் உலக மொழிகளில்  பலப்பல வெண்ணிறப் பொருள்களைக் குறிக்க alb, alba, albin, albion, albus என்ற வடிவங்களில் சொற்களாகியுள்ளன. பிரித்தானியாவின் பழைய பெயர்  'albion' எனப்பட்டதும் இவ் வெண்பனி மூடிய நாடு என்பதாலேயே இருக்க வேண்டும். ‘alp’ சொல்லுடன் காளையைக் குறித்த  aleph, alpha, alef  சொற்கள் சொல்லாலும் பொருளாலும் உறவுடையனவாகவே தெரிகின்றன.


Albion - Old name of Great Britain. (albus)
                      - Lat. Dic

Alps மலையின் சொற்பொருளை உன்னிக்கும்  Cassel's இலத்தீன் அகராதி இதனை வெண்மை குறித்த  ‘'albus'  உடன், உறவுடையதாகவே கருதுகிறது.
Alpes -perhaps connected wtih albus, the Alps.

தமிழின் வெது - வேது ஆகிய வெப்பம் குறிக்கும் சொற்கள், ஸ்வேது -> sveta  எனச் சமற்கிருதத்தில் திரிந்து வெண்ணிறப் பொருட்கள் பலவற்றை அம்மொழியில்  குறிக்கும். அவற்றுள் பனி மூடிய மலையைக் குறிக்கும்  Sveta parvata - snow mountain ஆட்சி இங்கு இணைத்தெண்ணத்தக்கது.

(காண்க: தமிழ் - வட இந்திய மொழிகட்கு இடையேயான வேர்ச்சொல், இலக்கண ஒப்புமைகள் குறித்த ஆய்வு. ப.330).

பாரதியார் இமயமலையை வெள்ளிப்பனிமலை  என்றார். இது, Alps மலையையும்  Sveta parvataவையும் பொருளால் இணைக்கும் தொடராகும்.

கல்  என்னும் தமிழ் வேருக்குக் கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை என வரையறுத்த ஆறு பொருள்களில் கல் ஆகிய கருமை பற்றி மட்டுமே எழுதி உலகம் பரவிய தமிழின் வேர் - கல் என முதல் பகுதியாக்கி வெளியிட்டேன்.

பழந்தமிழில் மலை, கல் எனப்பட்டது. மலை கருநிறம்உடையது  கருதி, அது அவ்வாறு அழைக்கப்பட்டதென்றேன். மணிமலை (சிறுபாண்), மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த்துறுகல் (குறுந்.)  சேயோன் மேய மைவரை உலகம் (தொல்.) போன்ற  சான்றுகளில் என் கருத்தை அரண் செய்தேன். தமிழின் இம் மலைக் கல்  ‘hill’ஆனதையெல்லாம் ஆங்குக் காட்டினேன்.

வெப்ப நாடான தமிழ்நாட்டில், பனி படர்ந்த மலைகள் இல்லை. ஆதலால் இங்குக் கருமலையேமிக்கிருந்தன. பனிப்பொழிவு  மிக்க மேலைநாட்டில் மலைகள் வெண்ணிறமாகக் காட்சியளித்தன. எல் என்னும் தமிழொளிச் சொல் மேலை உலகில் பலப்பல வெண்ணிறப் பொருள்களைக் குறிக்கச் சொல்லளித்ததுடன்  Alp, Alps என சுவிசு நாட்டில் தொடங்கி பிரான்சு வரை விரியும் மலைக்கும் சொல்லளிக்க மூலமானது.

Alp, Alps இன்  Alp உம் காளை குறித்த  aleph இன்   Alp உம்

காளை மாட்டினைக் குறித்த  'aleph' ஆகிய பொனீசியச் சொல்லிற்கும் அதனோடொத்த  alpha, alef  ஆகிய கிரேக்க ஈபுரு சொற்கட்கும் உரிய மூலச் சொல்லை  மூல வடிவை வேர்ச் சொல்லாய்வறிஞர்கள் யாரும் கண்டெழுதியதாக எமக்குத் தெரியவில்லை. வெண்மை குறிக்கும் 'albus' சொல்லுடன் alps  குறிக்கும் மலைச்சொல் உறவுடையதாகலாம் என கேசல்சு இலத்தீன் அகராதி உரைத்ததைச் சிறந்த இணைப்பாகவே  கருதுகிறேன்.

விலங்குகள், பறவைகள் போல்வன மட்டுமல்லாமல் உலகப் பொருட்கள் பலவும் கூட நிறம் சார்ந்து பெயர் பெற்றுள்ளன. இவற்றிற்கு நிறைய சான்றுகள் கொடுக்கலாம். இவ்வகையில்  கால்நடைகளில்  காரி, மயிலை, கபிலை, சிவலை, செவலை  என்பன அதனதன் நிறம் சார்ந்து வைக்கப்பட்ட பெயர்களாகும்.

donkey ஆகிய கழுதைப் பெயர்  brownishgrey என்னும் நிறங்குறிக்கும் dun ஆகிய அடிவழி உருவான தென்பார் சான்அயிற்றோ. தமிழிலும் கள் ஆகிய கருமை அடி வழி, கள்-களு-களுதை-கழுதை  என்பதாகவே கழுதைச் சொல் பிறந்தது.
கள்-கள்ளம் (கருமை); கள் - களா (கருங்கனி) ; கள் - காள்-காளம் (கருமை) ; காள்-காளை (கரிய நிறத்தது) எனக் காளைச் சொல்லின் வேர்ப் பொருளைக் கல்  நூல் முதல் பகுதியில் வரையறுத்திருந்தேன்.

'எல்' ஈன்ற வெள்ளைக் காளை

காளைச் சொல் அதன் கருமை நிறங் காரணமாக அப்பெயரைப் பெற்றிருந்தாலும் பிறகு பின் நாளில் அது பொதுவில் ஆண் மாட்டினை மட்டும் குறிக்கவும் தலைப்பட்டது. உண்மையில் சங்க இலக்கியத்தில் காளைச் சொல் ஒரிடத்தில் கூட மாட்டினை மட்டுமு; குறிக்கவும் தலைப்பட்டது. உண்மையில்  சங்க இலக்கியத்தில் காளைச் சொல்  ஓரிடத்தில் கூட மாட்டினைக் குறித்த ஆட்சி கிடைக்கவில்லை. உவமையாகுபெயராய்க் காளையனைய தலைவனே காளை எனப்பட்டுளளான். அந்த  அளவிற்குக் காளைச் சொல் மிகு பழஞ் சொல்லாக ஆகிவிட்டது. இந்த வகையில் தான் எல் என்ற தமிழ் வேர் வழிப் பிறந்த alb, albus ஆகிய வெண்மை குறித்த  மேலை மொழி வழக்குச் சொற்கள் வெண்பனி மூடிய Alp, Alps மலை குறிக்கும் சொல்லிற்கும் மூலமாகியது என்ற நெறிப்படி  Alp  எனப் பொனீசியர்களாலும் alpa எனக் கிரேக்கர்களாலும் alef என எபிரேயர்களாலும் காளை மாட்டினைக் குறித்த சொற்கட்கும் அக் காளை மாட்டின் வெண்ணிறத் தோற்றம் காரணமாகியது.

காளை மாடுகளில் வெண்ணிறக் காளைகள் சிறப்பித்துப் பேசப்ப ட்ட வரலாற்றைப் பின்வரும்  தமிழ் வழக்குகளில்  காண முடிகிறது.

             கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
             வண்ண மார்பின் தாரும் கொன்றை
             ஊர்தி வால்வெள் ளேறே.  -  (புறம், கடவுள் வாழ்த்து)

             .....வெள்ளேறு
             வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
             உமையர்ந்து விளங்கும் இமையா முக்கண்
             மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்.
            - (திருமுருகாற். 151-54)
          
           வெள்விடைதனை ஊர்தி நயந்தார்
           வேட்கள நன்னக ராறே
           - (தேவா. இரண்டாம் திருமுறை, வேட்களப்பதிகம்)

           வேதம் ஒதி  வெண்ணூல்  பூண்டு
           வெள்ளை எருதேறி - (தேவா. முதல் திருமுறை. திருப்பழனப் பதிகம்)

            படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
            விடைமலி கொடி அணல் விசயமங்கையே
           - (தேவா. மூன்றாம்  திருமுறை, திருவிசயமங்கைப் பதிகம்)
          
            வேண்டுநடை நடக்கும் வெள்ளேறு ஏறி
            வெண்காடு மேவிய விகிர்த னாரே
            - (தேவா. ஆறாம் திருமுறை, பொதுப் பதிகம்)

            கொடியேயும் வெள்ளேற்றாய்
            புரைவெள்சூளற்றுடைப் புண்ணியன் புகலூர்
            - (தேவா. ஏழாம் திருமுறை. புகலூர்)

வெண்மை குறித்த எல்  என்னும் தமிழ் வழக்கு  மேலை  உலகில்    வெண்மைப் பொருள்கள் பல குறித்தவாறு  Alp, Alps எனப் பனி மூடிய மலையைக் குறித்தவாறு வெள்ளைநிற எருதினைக் குறிக்கவும் முதற்கண் பொனீசியர் நாவிலோ அல்லது கிரேக்கர், எபிரேயர் நாவிலோ 'Aleph' எனவோ 'Alpha' எனவோ 'alef' எனவோ சொல்லாகியிருக்கலாம். செமித்திக் மொழிக் குடும்பச் சொல்லாகவே இந்த 'Alpha' சொல்லை  மேலை மொழியறிஞர்கள் கூறுகின்றனர். அவை எந்த வடிவில் எப்பெரிய மொழிக் குடும்பத்தில் பிறந்தவையாக இருந்தாலும் காளை மாட்டினைக் குறிக்கும் Alpha  என்ற  சொல் தமிழின் எல்  வழி பிறந்திருக்கவே வாய்ப்புள்ளது. தமிழின் எல்  வழிப் பிறந்த Alpha சொல்  கிரேக்க நெடுங்கணக்கில்  'Alpha' எனவும் ஆங்கிலத்தில் 'A' எனவும் சொல்லாக, எழுத்தாக ஒளிர்கிறது என்னும் கருத்தை  மீளாய்வு செய்ய வாய்ப்பிருப்பின் செய்யலாம்.

நன்றி - முதன்மொழி - மேழம்-விடை (ஏப்பிரல் -சூன் 2010)

3 comments:

  1. வணக்கம்!"உலகம் பரவிய தமிழின் வேர், கல் / கு. அரசேந்திரன்" புத்தகத்தின் நான்கு பாகங்களை வாங்கிப் படிக்க இணையதள முகவரி ஏதேனும் உள்ளதா?நன்றி

    ReplyDelete
  2. உங்கள் நூல்கள் வாங்க எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா 🙏🏿🙏🏿

    ReplyDelete
  3. உங்கள் நூல்கள் வாங்க எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா

    ReplyDelete