Wednesday, October 20, 2010

தமிழீழம் தந்த தாமோதரனார்-1

தமிழீழம் தந்த தாமோதரனார்-1

- கு.அரசேந்திரன்





 தமிழ்ப் பதிப்பின் தலைமகன்

ஆங்கிலேயர் வருகையாலும் ஐரோப்பிய கிறித்துவப் பாதிரிமார்கள் முயற்சியாம் நூல்கள் அச்சு ஊர்தியேறி உலா வந்தன. தமிழ்நூல் ஒன்றுதான் முதன் முதலாக இந்திய மொழிகளிலேயே அச்சேற்றிற்று என்பது வரலாறு. அந்நூல் 1557 இல் கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்நூலின் பெயர் தம்பிரான் வணக்கம் புrஷ்ழியி  என்பது. இது, பதினாறு பக்கங்கள் மட்டும் கொண்ட சமய வினாவிடை அமைப்பையுடையது. போர்ச்சுக்கீசிய மொழியிலிருந்த இந் நூற்செய்தியைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யஹன்றி குவிஸ் என்னும் பாதிரியாராவார். தமிழ் நூல்களை அச்சுவயப்படுத்தும் பணியில் முன் நின்ற வரலாற்றுப் பெருமகனாராக ஆறுமுக நாவலர் அவர்களே நமக்குத் தெரிகின்றார். கிறித்துவச் சமயத்தைப்பரப்ப கிறித்துவக் குருமார்கள் கையாண்ட அச்சு முயற்சியே ஆறுமுக நாவலர் அவர்கட்குச் சைவம் பரப்ப வழிகாட்டியாய் இருந்தது. இன்றைய உலகம் உற்று நோக்கும் தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆறுமுக நாவலர் அவர்களை ஒட்டியே, நம் நூலாசிரியர் தாமோதரர் வாழ்வும் பல்வேறு ஒற்றுமைகளுடன் தொடர்ந்தது.


தாமோதரர் கல்வியும் பணியும்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.9.1832 ஆம் நாளில் வைரவநாதர் -பெருந்தேவி ஆகியோர்க்கு  மகனாய்ப்  பிறந்தார் தாமோதரர். இவருடன் உடன்பிறந்தவர் எழுவர். இவருள் மூத்தவர் சி.வை.தா.

சி.வை.தா.வின் தந்தையார் ஓர் ஆசிரியர். ஆதலால் தொடக்கக் கல்வியும் அறநூல்கள், நிகண்டு நூல்கள் போன்றனவும் தந்தை வழியே இவருக்குக் கிடைத்தன. மேனிலைக் கல்வியைத் தந்தவர் சுன்னாகம் முத்துக்குமர நாவலர்.

தமிழ்க் கல்வியில் வேரூன்றிய தாமோதர் 12 ஆம் அகவையின் 1844 தொடக்கம் 1852 முடிய எட்டாண்டுகள் தெல்லிப்பழை மிசன் பாடசாலை, வட்டுக்கோட்டைக் கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலக் கல்வியைக் கற்றார்.

1852 இல் கல்வி முடித்த கையோடு 20 ஆம் அகவையில்  கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தாமோதரர் ஆசிரியரானார். 1856 இல் ஆறுமுக நாவலரின் ஆங்கில  ஆசிரியரும் கிறித்துவ  மறைநூல் விவிலியத்தை ஆறுமுக நாவலர் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்து வெளியிட்டவரும் ஆகிய பெர்சிவல் பாதிரியார் சென்னையில்  தொடங்கிய தினவர்த்த மானிக்கு ஆசிரியர் பொறுப்பேற்றார்.

சென்னை வாழ்வில் 1856 இல் புகுந்த தாமோதரர் 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழாசிரியப் பொறுப் பேற்றார். அத்துடன் அதே ஆண்டு அங்குத் தொடங்கிய பி.ஏ. பட்ட வகுப்பில் சேர்ந்து  தேர்வெழுதிச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டாதாரியானார்.
கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்குச் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து பணிமாற்றம் பெற்றுச் சென்ற தாமோதரர் 39 ஆம் அகவையில் 1871 இல் பி.எல். பட்டமும் பெற்றார். 50 அகவையில் 1882 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற  சி.வை.தா. 1884 இல், தாம் பெற்றிருந்த சட்டக் கல்வியின் சிறப்பால் புதுக்கோட்டை அரசின் முறை மன்ற நடுவரானார். அப்பணியிலிருந்து 1890 இல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற சி.வை.தா. 1884 இல், தாம் பெற்றிருந்த சட்டக் கல்வியின் சிறப்பால் புதுக்கோட்டை அரசின் முறை மன்ற நடுவரானார். அப்பணியிலிருந்து 1890 இல் ஓய்வு பெற்றார். 1895 இல் பெருமக்கள் பலரின் வாழ்த்துக்களுடன் இராவ் பகதூர் பட்டம் பெற்றார். 1901 சனவரி 1 ஆம் நாள் புரசைவாக்கத்தில் தம் 68 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

பதிப்பித்த நூல்களும் அருமைப் பாடும்

சி.வை.தாமோதரரின் பலநிலை தமிழ்ப்பணிகளில் முதன்மையானது அவரின் தமிழ்நூல் பதிப்புப் பணியே. அவரால் பதிப்பித்து வெளியிடப்பட்ட நூல்களும் ஆண்டுகளும் பின்வருமாறு அமைகின்றன.



 1.  நீதி நெறி விளக்கம்                                                                 1854
 2.  தொல். சேனாவரையம்                                                           1868
 3.  வீரசோழியம் பெருந்தேவனார் உரையுடன்                 1881
 4.   இறையனார் களவியல்                                                         1883
 5.  தணிகைப் புராணம்                                                                   1883
 6.  தொல்.பொருள். நச்                                                                    1885
 7. கலித்தொகை                                                                                 1887
 8.  இலக்கண விளக்கம்                                                                 1889
 9.  சூளாமணி                                                                                       1889
 10.  தொல். எழுத்து                                                                            1891
 11.  தொல்.சொல் (நச்)                                                                     1892

அச்சில்  வெளிப்போந்த நூல்களாக இவை அமைய, தாமோதரர் 1898 இல் அகநானூற்றை வெளியிடும் நிலைக்கு அணியப்படுத்தி வைத்திருந்த
உண்மையையும் அவர் வரலாற்று வழி அறிகிறோம்.

சி.வை.தா. வெளியிட்ட 11 நூல்களில் தொல், எழுத்து மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர, பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன் முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்.

தமிழ்ப்பற்றே பதிப்புப் பணிக்கு அடிப்படை

சி.வை.தாமோதரர்க்கு உயிருணர்வில் கலந்து நிறைந்திருந்த தமிழ்ப்பற்றே தமிழ் நூல் பதிப்பு முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கின்றது. ஓலைச் சுவடிகளாக இருந்த தமிழ் நூல்களெல்லாம் அழிந்தொழிவதைக் கண்டு அவற்றை அச்சுவடிவில்  கொண்டு வர அந்நாளில் யாரும் பெருமுயற்சி செய்யவில்லை. அரிய பணியானதால்  எளிதாக யாரும் அப்பணியைச் செய்ய முன் வரவில்லை. ஆயினும் இப் பணி மிக இன்றியமையாததோர் மூலப் பெரும்பணி என்பதை நம் தாமோதரர் அறிந்த படியால், தாமே அப் பணியைப் பிறவி முழுவதையும் செய்த பார்ப்பதென முடிவு கொண்டார்.

 ‘நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையயழுத்துப் பிரதிகளின் கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்கமாட்டாமையயான்றே என்னை இத் தொழிலில்  வலிப்பது’.
 ‘பல பெரும் வித்துவான்கள் இந்நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன பூரணமாக அறிவேன். ஆதலால், பண்டிதர் , கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்னபெரும்பட்டச் சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பல காலந தமிழ் படித்தற்க உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று’.

மாசுமறுவற்ற தமிழ்ப்பற்றாளர் சி.வை.தா.வின் இக் கூற்றுக்களைத் தமிழின உரிமை மீட்புப் பெருந்தலைவர் தந்தை பெரியார் உரைத்த ‘ ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தை உலகத்திலுள்ள மற்ற உயர்ந்த சமுதாயம் போல் ஆக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இதைச் செய்து முடிப்பதற்கு எனக்கு யோக்கியத்தை இருக்கிறதோ இல்லையே வேறு  யாருமு; இதைச் செய்ய முன் வராத காரணத்தால் நானே இப் பொறுப்பை மேற்கொண்டுள்ளேன். இது வொன்றே எனக்குப் போதுமான தகுதியயன்று நான் கருதுகின்றேன்’ என்ற கருத்துரையுடன் பெரிதும் ஒப்பு நோக்க வேணடும்.

சி.வை.தாமோதரனார் காலத்தில் தொல்காப்பியம் பொருளதிகாரம் பதிப்பிக்க முயன்றோர் இரண்டொரு பிரதிகளே தேடிப் பணி தொடங்கிக் கைவிட்ட நிலையில் நம் தாமோதரர் தேடித் தொகுத்து  வைத்திருந்த சுவடிகள் பன்னிரண்டாகும். அவை, திருநெல்வேலிப் படி 2, மதுரைப்படி 2, தஞ்சைப் படி 2, சென்னைப் பட்டினப் படி 3, யாழ்ப்பாணப் படி 2 என்பனவாகும். இப்படிகளெல்லாம் யார் யாரிடமிருந்து பெறப்பட்டன என்பதைச் சி.வை.தா. தொல்.பொருள் பதிப்புரையில் குறித்துள்ளார்.

'திரவிய லாபத்தை எவ்வாற்றானும் கருதி முயன்றிலேன். கை நஷ்டம் வராதிருப்ப தொன்றே எனக்குப் போதும். இது வரையிற் பதிப்பித்த நூல்களால் எனக்குண்டான நஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறா திருத்தற் பொருட்டுச சர்வ கலாசாலைப் பரீட்சையிற் தேறி ஆங்காங்கு பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தம் சொய பாஷையில் அச்சிடப் படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை, என்றெண்ணுகின்றேன்' என்று மனம் வெதும்பி நைகிறார் தமிழ்த்தாமோதரர்.

திருட்டு வேலை செய்கின்ற ஒருவன் தன்னைப் போலவே எல்லோரும் திருட்டு வேலை செய்யட்டும் என்று சொல்ல மாட்டான். ஆனால், நற்பணிகள் செய்யும் ஒருவனோ தான் செய்யும் பணிகளில் இன்பமும் பிறர் பிறர்க்கும் இம் மன்பதைக்கும் நலமும் விளைவது கண்டு எல்லோரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என உலகோர்க்கு  அழைப்பு விடுப்பான். மனத்தளவிலும் எல்லோரும் இப்பணியைச் செய்தால் உலகம் எப்படியிருக்கும் என்று கருதிக் கொண்டே கரைவான். நம் தாமோதரர் செய்த பணியோ பொதுப்பணி. அத்தகைய அரும்பணியை அதன் முழுத் தன்மையும் கருதிச் செய்யத் தொடங்கிச் செய்தவர். ஆதலால், தாம் செய்யும் பணியைத் தமிழ் மன்பதையும் செய்ய வேண்டுமெனத் துடியாய்த் துடித்து வேண்டுகோள் விடுக்கின்றார்.

‘சங்க மரீஇய நூல்களால்  வகுக்கப்பட்ட எட்டுத் தொகை பத்துப்பாட்டுள் எட்டுத் தொகையில் இக் கலித்தொகையும் பத்துப் பாடலுள் திருமுருகாற்றுப் படையுமே இப்பொழுது அச்சில் வந்தன. எஞ்சிய பதினாறனையும் பெயர் மாத்திரையானே அறிந்தாற் போதுமா? இவைகளைத் தங்கள் தங்களால் நன்கு மதிக்கப் பட்ட சில வித்துவான்களைக் கொண்டு பரிசோதிப்பித்து வெளியில் வரச் செய்யத்தக்க சீமான்கள் யாரும் இல்லையா! தமிழின் அருமையுணர்ந்த பெரியோர், மடாதிபதிகள் என்றின்னோர் இவற்றில்  கடைக்கண் சாத்துமாறு சரஸ்வதி அனுக்கிரகிப்பளாக’ என்பன தாமோதரரின், உள்ள வேட்கையில் சிறு துளிகளேயாகும்.

‘இவரது (சி.வை.தாமோதரர்) தமிழார்வம் இவர் உள்ளத்தில் மங்கள ஒளியாய்த் திகழ்ந்து ஒரு காலைக்கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிழம்பாகச் சுடர்விட்டு எரிந்தது’ என்று பிற்காலத்தில் பதிப்புத்துறையில் பல அரும்பணியாற்றிய வையாபுரிப்பிள்ளை சி.வை.தா. வின் உணர்வைத் தொட்டுக் காட்டுவார்.

பிறவிப் பணியே பதிப்புப் பணிதான்

உயிர்கள் யாவுமே அறிவுக் கூறுடையன. ஆயின் மாந்தனே அறிவுக் கூர்மையன். ஒவ்வொரு மாந்தனும் கூர்தலறப் படி ஒவ்வொன்றில் கூர்மையகப் பிறக்கின்றான்.அவ்வொன்று என்னவென்று ஒவ்வொருவரும் தத்தமக்குள் கண்டாக வேண்டும். இயற்கையும் ஒவ்வொன்றில் ஒவ்வோருயிரையும் அவ் வொவ்வொன்றிற்காக இயக்கி வருகின்றது. இஃது மெயம்மம். மாந்தப் பிறப்பு இவ்விலக்கு நோக்கியே இயங்கியாகல் வேண்டும். மாடு, மனை, மக்கள், வீடு, உறவு, சொத்து என்பன யாவும் ஒவ்வொருவரின் குறிக்கோளுக்கு உறுதுணையே அல்லாமல் அவை முதன்மையாக. இவ்வகையில், சி.வை. தாமோதரரின் வாழ்க்கையை ஊன்றி  நோக்கினால் அவர், தமிழ்நூல் பதிப்புப் பணிக்காகவே பிறந்தவர் ; பிறப்பிக்கப்பட்டவர் என்பதை உணரலாம். ஓர் அறிஞன் தன்பணியை எங்குத் தொடங்கினானோ அல்லது எங்குத் தொடங்கும்படி இயற்கை பணித்ததோ அங்கேயே அங்கி ருந்தே தன் பணியை முறையாய்த் தொடர்ந்து தான், மேற் கொண்ட பணியையும் தன்னையும் செழுமைப்படுத்திக் கொள்வான்.

1887 இல்  கலித்தொகையைப் பதிப்பித்து வெளியிடும் சி.வை.தாமோதரர்க்கு அப்போது அகவை 55. முதல் நூலாக நீதி நெறி விளக்கத்தை 1854 இல் வெளியிட்ட போது தாமோதரருக்கு அகவை 22. இளம் அகவையான 22 இல் பதிப்புப் பணியைத் தொடக்கிய சி.வை.தா. அதற்கும் முந்தைய கழியிளம் பருவத்திலேயே தமிழ் ஏடுகளைத் தேடும் பணியை மேற்கொண்டிருந்தார் என்பதை அவரின் கலித்தொகைப் பதிப்பு முன்னுரை வழி அறிந்தோம்.
'யான் முப்பத்தைந்து வரு­த்தின் முன் (அஃதாவது 1887 இலிருந்து முப்பத்தைந்தாணடு முன்பு)  பிரமாதீச வரு­ம் ஒரு தரம் அருமையான தமிழ் நூல்கள் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து  இக்கண்டத்தில் வந்து நடமாடிய போது கூடலூரில்  மஞ்சக் குப்பத்தில் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பில் சொக்கலிங்கம் பிள்ளை என்றோர் தமிழ்ப் பண்டிதரும் கலித்தொகை வைத்திருந்து என் ஞாபகத்திற்கு வர அந்த இடங்களில்  சென்று விசாரித்தேன்'.

சி.வை.தா. 1887 க்கு முப்பத்தைந்து ஆண்டுக்கு முன் அஃ;தாவது 1852 இல் 20 அகவையராயிருந்தார். அப்பொழுதே அவர் தமிழ் நூல்களின் அருமை உணர்ந்தவராய் இருந்தபடியினாலேயே முப்பத்தைந்தாண்டு கடந்த 55 ஆம் அகவையிலும் பழைய நினைவு நிற்கும்படித்தாய் இருந்ததென்பதை இதன்வழி அறிகின்றோம்.

தாமோதரர் 1856 இல் தினவர்த்தமானிக்காகத் தம் 24 ஆம் அகவையில் சென்னைக்கு வந்து சேர்ந்ததன் முன் 1852 ஆம் ஆண்டாகிய 20 ஆம் அகவையில் முதன் முதலாகச் சென்னை வந்திருப்பார் போல் தெரிகின்றது. இவ்விருபதாம் அகவையில் வந்த வருகை, அவர் கலித்தொகை முன்னுரையில்  சுட்டியுள்ளது போல் தம் தந்தையாருடன் மேற்கொண்டிருந்த வருகையாகத்தெரிய  வருவதால்  அதுவே  முதல்  வருகை என்று கொள்ளலாம். 1856 ஆம் ஆண்டின் தினவர்த்தமானிப் பணியைத் தாண்டி 1857 இல் மாநிலக் கல்லூரித் தமிழாசிரியப் பணியேற்ற பின் உள்ளே உறைந்து கிடந்த தமிழ்நூல் தேடும் வேட்கை மேலும் கிளர்ந்தெழ அடிப்படையாய் அமைந்திருக்க வேண்டுமெனக் கொள்ளலாம். சிறு அகவையிலேயே இவையிவை செய்யத்தக்க பணிகள் என மனங்கொண்டிருந்த தாமோதரர்க்கு வாய்ப்பும் வசதியும் வரும் போது வேகம் பிறந்தது இயல்பேயாகும்.

1857 இல் மாநிலக் கல்லூரித் தமிழாசிரியப் பணியேற்ற போது தமிழ் கற்பிப்பதற்கு தூய தமிழ் இலக்கண நூலாக ஒன்றும் இல்லாதுபோன மனக் குறைவில்தான் தாமோதரர் தொல்காப்பியப் பதிப்புப் பணியைத் தொடங்கியிருப்பார் போல் தெரிகின்றது. மழவை மாகலிங்க ஐயரின் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்கினியம் 1848 ஆம் ஆண்டளவில் வெளியாகியிருக்க, ஏனைய சொல்லும் பொருளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து கிடந்ததும் தாமோதரர்க்கு தொல்காப்பியப்பதிப்பு முதன்மையாகப்பட்டடிருக்க வேண்டும். தாமோதரர், பல நூல்களைப் பதித்து வெளியிட்டிருப்பினும் அவர் பெரிதும் விரும்பி உழைத்துப் பாடுபட்டு வெளியிட்டவை தொல்காப்பியமும் கலித்தொகையுமே எனலாம். நூற்பதிப்பு வெளியீட்டிலும் பழந்தமிழ் நூற்பதிப்பே அவரைப்பெரிதும் செய்யத் தூண்டிய பதிப்பென்று நாம் கருத வேண்டியுள்ளது.

சி.வை.தாமோதரர் காலம் வரும்வரை எவரும் பழந்தமிழ் நூற்சுவடிகளைத் தேடிப்பதிப்பிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. தாமோதரனார்க்கு முன்னரத் தமிழில் வெளிவந்த பதிப்புப் பணிகள் இவையிவை என்றும், இவற்றுள் தாமோதரர் மேற்கொண்ட தமிழ் நூற்பணி எத்தகையதென்றும் வையாபுரிப் பிள்ளை மிகத் தெளிவாகத் தம் தமிழ்ச்சுடர் மணிகள் நூலில் தாமோதரர் பற்றிக் கூறுமிடத்துத் தொகுத்துத் தந்துள்ளார்.

‘ஸ்ரீஆறுமுக நாவலர் சைவசமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்வான் தாண்டவராய முதலியார் திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சியற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினிVர்க்கினியார் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமாளையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்க லீலை, சூடாமணி நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திரு வேங்கட முதலியார் இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஸ்ரீ உ.வே. சாமிநாத ஐயவரவர்கள் அப்பொழுதுதான் சீவகசிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, நமது பிள்ளையவர்கள் தன்னந் தனியராய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும்முயற்சியை மேற்கொண்டனர்’.

காரணம், சமய நூல்களெல்லாம் மடங்களாலும் சமயப் பற்றாளர்களாலும் பேணப்பட்டடிருந்த நிலையில் பழந்தமிழ் நூற்சுவடிகள் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தன.
சமயப் பித்தங்கொண்ட ஈசான தேசிகர் திருவாடுதுறையின் மடப்புலவர். இவர் சமய நூல்களை விட்டு விட்டு சமயம் சாராத நூல்களைக் கற்போர் இழிவானவர் என்ற கருத்தினை இலக்கணக் கொத்து முன்னுரையில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment