-முனைவர் கு. அரசேந்திரன், சென்னை கிறித்தவக் கல்லூரி.
தமிழ் மக்கள், தம் சொந்த மண்ணாகிய தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் உள்ள கோவில்களில் தத்தம் வழிபடும் கடவுளைத் தமிழால் வழிபடாமல் பிறமொழியாகிய சமற்கிருதத்திலேயே மிகுதியும் வணங்கி வருகின்றார்கள். இப்பழக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கட்டிய கோவில்களிலும் தொடர்வதாகவே தெரிகின்றது. சிவனியம், மாலியம் ஆகிய தொல்தமிழ்ச் சமயக் கோவில்களில் வழிபாடாற்றும் தமிழர்கள் சமற்கிருதம் ஆகிய அயல்மொழிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, அந்நிலையுருவான வரலாற்றை விளக்கி அதில் நிகழ வேண்டிய உரிமை மீட்புத் தேவையைப் பேசுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
தமிழிலுள்ள மெய்யியல் சொற்களுள் இறை என்பது ஒன்றாகும். பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் இரண்டிடங்களில் இச்சொல் வந்துள்ளது. இவ்விரண்டிடத்திலும் வந்துள்ள இறையயன்ற சொல்லுக்குத் தங்குதல் என்பதே பொருளாகும்.அரசு என்பது மக்கள் அனைவரையும் காக்கும் ஓரமைப்பாகும். ஒரு நல்ல அரசன் அவனது ஆணைகள் வழியாக எல்லா இடத்திலும் தங்கியிருக்கிறான் என்று கருதப்படுகிறான். இறை என்னும் சொல் ஆண்பால் ஈறாகிய அன் பெற்று இறைவன் எனத் தொல்காப்பியத்தில் ஆளப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தை ஒட்டிய சங்கப் பனுவல்களிலும் பல இடங்களில் அரசன், இறைவன் எனக் குறிப்பிடுகிறான். (புறம் 18 ‡ 26, 48 ‡ 5) தமிழ்மறைத் தந்த திருவள்ளுவப் பேராசனும் அரசனை இறைவன் என்ற சொல்லால் குறித்துள்ளார். (குறள் 690, 733)
இன்று நாம் இறைவன் என்று கடவுளையே குறிக்கின்றோம். திருவள்ளுவர் நாம் குறிப்பது போலவே கடவுள் என்ற பொருளிலும் இறைவன் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் ‘புகழ்புரிந்தார் மாட்டு’ (குறள்5) ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடிசேரா தார்’ (குறள் 10) என்னும் இரண்டிடத்திலும் இதனைக் காணலாம். கடவுள் எனப்படும் பொருளில் இறை என்ற சொல்லும் அன் என்னும் ஈறு சேர்த்து இறைவன் என்று சொல்லப்படும் சொல்லும் எந்த அடிப்படையில் தமிழர்கள் கருதிக் குறித்துள்ளார்கள் எனில், கடவுளாகிய பரம்பொருள் எல்லா இடத்திலும் தங்கியிருக்கின்றது என்பதன் அடிப்படையிலேயே ஆகும். எனவே, தங்குதல் எனப் பொருள்தருவதன் வழியாகத்தான் இறை என்ற சொல் தமிழில் கடவுளைக் குறிக்க வழங்கப் பெற்றது என்பதனை யாம் அறிதல் வேண்டும்.
தமிழர் தம் மெய்யியல் கருத்தை இருவேறு கோணங்களில் நுணுகி நின்று ஆய்வு செய்ய வேண்டும். ஒன்று புறம் சார்ந்தது. பிறிதொன்று அகம் சார்ந்தது. இக்கட்டுரை மிகுதியும் அகம் சார்ந்ததையே அடிப்படையாகக் கொண்டு செல்கின்றது. தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் நால்வகை நிலங்கள் பற்றிக் கூறும்பொழுது :
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
என்று நூற்பா செய்தார். இத்தொல்காப்பிய மரபுப்படியே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் வரும் அகப்பாடல்களில் தெய்வத்தைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளார்கள். தொல்காப்பியத்திலும் சங்கப் பாடல்களிலும் தெய்வம் பற்றிச் சொன்ன செய்திகள் தமிழர் தம் அன்றாட வாழ்வியலில், வழிபாட்டில் புழங்கி வந்த ஓர் இறையியல் மரபுகளேயாகும்.
இவைபற்றிய செய்திகளிலேயே தமிழர்தம் மெய்யியலைக் கண்டுவிட முடியாதென்பதை உணர வேண்டும். அதாவது மக்கள் வாழும் நிலத்தில் தோன்றி நிற்கும் வாழ்வியற் தேவைகள் பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் ஆன புறநிலையையயாட்டி எழுந்த வழிபாட்டுத் தோற்றங்களே இவை என்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும். சான்றோர் மரபில் உள்கி உள்கி மெய்ம்மம் கண்ட அறிவர்கள் மரபில் கண்டு தெளிந்த கருத்துகள் யாவை என்பதையே நாம் பழந்தமிழர்களின் இறைமைக் கோட்பாடு அறிந்தாக வேண்டும். அத்தகைய பகுதி பற்றி அறிதற்கும் நிறையப்பகுதிகள் தொல்காப்பியத்திலும் சங்கப்பனுவல்களிலும் உள்ளன.
தமிழினம் சங்ககாலத்திலேயே உயர்ந்த மெய்ப்பொருள் பிழியலை எட்டிப்பிடித்து விட்தென்பதற்கு நிறையச் சான்றுகளைச் சொல்லலாம் என்றாலும் விரிவஞ்சி ஒரேயயாரு சான்றினைக் கூறவேண்டுமேல் அதற்குக் கணியன் பூங்குன்றனாரின்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலையி ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் போயிற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம் 192)
என்னும் ஒரு பாடலே போதுமானதெனலாம்.
சங்க காலத்தில் தமிழர்கள் கடவுளை எப்படி வழிபட்டார்கள் என்பதை மிகச் சுருக்கமாகவேனும் அறிந்து கொள்வது இக்கட்டுரைக்குத் தேவையயனக் கருதுகிறோம். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் வணங்கப் பெற்ற வழிபாடுகள் யாவும் ஒரு நன்றியுணர்ச்சியில் வகைப்பட்டனவேயாகும். ஆடுமாடுகளைச் சார்ந்து நின்ற முல்லை நில மக்கள் தம் ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு வேண்டிய புல்லுக்கு அடிப்படையான மழையையும் மழையின் மூலமான மேகத்தையும் வணங்கினர். மால் என்பதற்கு கருமை என்பதே முதற்பொருளாகும்.
மேகம் கருமையாக இருந்தபடியால் அதுபோல் கரியநிறமுடைய உருவைக் கடவுளாகப் படைத்து வழிபட்டனர். அதுவே மால் வழிபாடாகும். திரு எனும் சிறப்பு அடையைச் சேர்த்து திருமால் என வழங்குவதாயிற்று. குறிஞ்சியில் வேட்டையாடி வாழ்ந்த தொல் தமிழ்மக்கள் தம் தொழிலுக்கேற்ப கூர்க்கருவியான வேலினை வீரனொருவன் கையிற் கொடுத்து தம்மை விலங்குகளிலிருந்து காக்கும் தீப்பந்தத்தின் அடையாளமாகச் செந்நிறத்தை அவனுக்கு அளித்து அந்நிலத்தின் அழகிய பறவையாகிய மயிலில் அவன் அமர்ந்துவரின் அழகாக இருக்குமென நினைத்து அதனையே ஊர்தியாக அமைத்து அழகும் ஆற்றலும் உடையவன் என்னும் பொருளை உணர்த்தும் முருகு என்னும் சொல்லால் ஓர் உருவத்தை உருவாக்கி வழிபட்டனர்.
அவ்வழிபாடே முருக வழிபாடாயிற்று. இவ்வாறாக ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தம் வாழ்க்கையையயாட்டி ஒவ்வொரு உருவத்தை உருவாக்கி தத்தமக்குரிய இசைக் கருவிகளைக் கொண்டு இசைத்து ஆடியும், பாடியும் வழிபட்டு வந்தனர். பழந்தமிழ் மக்கள் வழிபட்ட கடவுள் வடிவங்கள் பல ஆயினும் கடவுள் எனப்படும் ஆற்றல் அருவமாய் இருந்து இக்கடவுள் படிங்களின் வழியாக அனைத்தையும் கண்காணித்து இயக்கி வருகிறதென்று நம்பினார்கள். இதற்குச் சான்றாக ‘விரிச்சிக் கேட்டல்’ என்னும் பழக்கம் அந்நாளில் இருந்ததை எடுத்துக்காட்டலாம்.
எங்குமாய் நிறைந்து எல்லாவற்றையும் அதனதன் பாட்டில் இயக்கும் பரம்பொருளை வணங்குவதனை பழந்தமிழர்கள் உணர்ச்சியாய்க் கொண்டிருந்தனர். கடவுளாகக் கற்பிதம் செய்து படைத்த படிமைகளை அல்லது கற்களை இன்று போலவே கோயில்களிலும், பொதுவிடங்களிலும், ஆற்றங்கரைகளிலும், வயல்வெளிகளிலும், கடற்கரைகளிலும், மலைகளிலும், வீட்டறைகளிலும் வைத்து வணங்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் எதனெதனைத் தெய்வமெனக் கருதுகிறார்களோ அதுவதுவே அவரவர்களுக்கு வழிபடு தெய்வமாகும். எந்தத் தெய்வத்தை தெய்வமெனக் கருதி வழிபட்டாலும் அந்தத் தெய்வம் அவர்களுக்கு துணைநிற்குமெனப் பழந்தமிழர்கள் நம்பினர். அகநாநூற்றுப்பாடல்களில் செங்கல்லால் நெடுஞ்சுவர் எழுப்பிக் கோவில்கள் கட்டப்பட்ட செய்தி வருகின்றது. நெடிய கட்டடங்கள் அல்லாமல் ஊர்ப்பொது இடத்தில் (அம்பலத்தில்) சிறியதாகக் கட்டப்பட்ட கோயில்களிலும் மக்கள் அணையாவிளக்கு ஏற்றி வைத்து கடவுளை வழிபட்டு வந்துள்ளனர். பட்டினப்பாலையில், பெண்கள் மாலையில் குளித்து அணையாவிளக்குடைய பொதியிலில் மலரும் மெழுக்கமும் கொண்டு அங்குள்ள தெய்வம் உறையும் தறியாகிய கந்தினைத் தொழுத செய்தி சொல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் உள்ளதைவிடக் கோயில்கள் அதிகம் என்பர். அதாவது இந்தியாவில் உள்ள கோயில்களில் பாதிக்கோயில்கள் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பாதிக் கோயில்கள் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளன என்பர். சீரழியும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் என்ற நூலில் திரு.ப.நெடுமாறன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மொத்தக் கோயில்கள் 32130 என்பார். தேவார மூவரால் பாடப் பெற்ற கோயில்கள் 274 என்பதும் ஆழ்வார்கள் சிறப்பித்துப் பாடிய திருமால் தலங்கள் 108 என்பதும் அறிய வேண்டிய செய்தியாகும். கோயில்கள், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் என்ன காரணத்தினால் இவ்வாறு பெருக்கமுற்றன என்றும் எந்தெந்த காலகட்டத்தில் பெருகின என்றும் அறிவது பெரிய ஆய்விற்குட்பட்டதாகும். அவ்வளவு எளிதாக இவற்றிற்கு விடை சொல்ல முடியாது என்றாலும் தமிழால் இறைவனை வழிபடுவோம் என்றத் தலைப்புப் பற்றிச் சிந்திக்கும் பொழுது சிறிதாவது இதுபற்றி நாம் பார்த்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.
இன்றைய இந்திய வரலாறு என்பது கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேலாகச் சமயப் பூசல்கள் இருந்து வந்த நிகழ்வாகும். உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றான பெளத்தத்தின் மூலவரான கெளதம புத்தர் பிறந்த நாடும் இந்தியாவே இந்திய சமய தத்துவங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய சமணசமயத்தின் மூலவரான மகாவீரர் பிறந்த மண்ணும் இந்தியாவே. இவ்விரண்டிற்கும் மேலாக இந்தியா எனப்படும் பழந்தமிழகமாகிய நாவலந்தீவினுள் இருந்த தொல்தமிழ் மக்களின் இயற்கை வழிபாடும் சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே தோன்றி வளர்ந்து செல்வாக்குப் பெற்றிருந்த சில வழிபாடும் நடைபெற்ற இடமும் இந்தியாவே. இவற்றுடன் அறிவு முதிராத வேள்வி வழிபாட்டொடு புனைவுகளையும் சேர்த்துக் கலந்து உருவாக்கி இருக்கின்ற இந்துசமயம் என்பது பெரிய அளவிலான எண்ணிக்கையுடன் உள்ள நாடும் இவ்விந்திய நாடேயாகும். அத்துடன் இந்து சமயத்திற்கு எதிரானதெனப்படும் இசுலாம் சமயமும் குறிப்பிடத் தகுந்த அளவில் நிறைந்திருக்கும் நாடும் இவ்விந்திய நாடேயாகும். சுருங்கச் சொன்னால் பலப்பலவான சமயமூட்டமே நிறைந்த நாடாக இந்தியா இருந்து வருகின்றதெனலாம். இவ்வாறான பலசமயப் பூசல்களும், சமயஞ்சார்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ள நிலைமைகளும் எண்ணற்ற கோயில்கள் இங்கு எழுவதற்குக் காரணமாகி இருக்கலாம் என்று எண்ணுவதில் தவறிருக்க முடியாது.
இந்தியாவில் பெரியதோர் பக்தி இயக்கம் நாடு முழுவதும் பரவியமைக்கு என்ன காரணம்? அப்பக்தி இயக்கம் எங்கே முதலில் தோன்றியது என்பதும் அறியவேண்டியதாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் தோன்றிய காரைக்கால் அம்மையாரே தமிழில் பக்தி இயக்கத்தை உருவாக்கி வளர்த்தவர்கள் என்ற நூலில் குறித்துள்ளதாகப் பெரியபுராண ஆய்வு நூலாசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் சொல்லியுள்ளார். மேற்குறிப்பிட்டது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் பக்தி இயக்கம் தோன்ற வேண்டும்? ஞானசம்பந்தரும் அப்பரும் எதற்காகப் பக்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் கேட்டு, நாம் அதற்குரிய விடை கண்டாக வேண்டும்.
திருஞானசம்பந்தர் தேவார மூவரில் முதலாமவர் ஆவார். திருஞானசம்பந்தர் தமிழால் இறைவனை வழிபட 4000 பாடல்கள் புனைந்து தந்த பெருமைக்கும் உரியவர். இத்தகைய தேவையும் சூழலும் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தர் காலத்தில் ஏற்பட்டமைக்குக் காரணம் என்ன? தமிழர்களது தொன்றுதொட்ட சமயமான சிவனியமும் மாலியமும் பல்வேறு இயற்கை வழிபாடுகளும் மிகப்பெரிய இடையூறிற்கு ஆளான காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு தொடங்கிய காலம். இக்காலத்தில் இச்சமயங்களை, வழிபாட்டு முறைகளை அழித்தொழிக்கத் தமிழ்நாட்டில் சமணமும், பெளத்தமும் படையயடுத்தன. இச்சமணமும் பெளத்தமும் தமிழ்நாட்டிலிருந்த தொல்தமிழ்ச் சமயங்களை மட்டுமல்லாது தமிழர்களின் உயிர்மூச்சாய்ப் பல்லாயிரம் ஆண்டுகளாய் உடன் உறைந்து வந்த தமிழையும் அழிக்கப் புகுந்தன. சமணம், பெளத்தம் என்பன தமிழ்நாட்டில் ஊடுருவி வளர்ந்ததற்கும் ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. அக்காரணம் யாதென்றால், தொல்காப்பிய காலந்தொடங்கிச் சங்ககாலத்திலும் பரவி, இங்கு செழிக்கத் தொடங்கிய ஆரியச் செல்வாக்கும் அவர்களின் வருணப்பிளவுச் சிந்தனைகளும் அவர்களின் வேள்வி மதத்திற்கும் தமிழர்கள் உடன்பட்டு ஒன்றிப் போய்க் கொண்டிருந்த நிலைமைகளும் ஆகும்.
பெருவீச்சாய்த் தொடங்கிப் பெருவீச்சாய் முடிந்த களப்பிரர் ஆட்சியின் பின், அயற்புல அரசராய் மீண்டும் தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் பல்லவர்கள் ஆவார். இப்பல்லவர்களில் சிலரே சமணம் சார்ந்திருக்க, பலர் சைவ, வைணவம் சார்ந்தோராய் இருந்தனர். சைவ, வைணவம் என்பன இங்கு கொடுத்த வைதீகம் சார்ந்ததைக் குறிக்கும். அதாவது, மிகப்பெரிய அளவில் வேத மதத்தையும் பிராமணர்களின் முழு மேலாளுமையையும் ஏற்றுக் கொண்டமையைக் குறிப்பதாகும். இங்கு பல்லவர்கள் பேணிய பிராமணர்கள் என்போர் வடநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு வடமொழி மட்டுமே அறிந்த பிராமணர்கள் ஆவார்.
இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் காசாக்குடிச்செப்பேடு ‘ஸோமாயாஜி’என்பவனுக்கு அம்மன்னன் பெருங்கொடை தந்ததை குறிப்பிடுகிறது. அதிற் குறிக்கப்படும் ‘ஸோமாயாஜி’ வடமொழி வல்லவர் என்றும் அவனைப் பெருமைப் படுத்திக் கூறுகிறது. காஞ்சிபுரம் பல்லவர்கள் நகரமாக விளங்கியது. அங்குக் கடிகை எனப்படும் வடமொழிக் கல்லூரியை நிறுவி வடநாட்டுப் பிராமணர்களையே அதில் தங்கவைத்து அவர்களைப் பல்லவர்கள் காத்தனர்.
தமிழ்நாட்டில் இப்படியாகப் பல்லவர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் அல்லாத வடமொழிமட்டும் அறிந்த பிராமணர்களைக் குடியேற்றி அவர்களை நிலைக்க வைத்த நிகழ்ச்சி நன்கு நடந்து வந்தது. இவ்விவரங்களைத் ‘தண்டன் தோட்டச் செப்பேடு’ தெளிவாக எடுத்துரைக் கின்றது. பல்லவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்களை நம்பாமல் போனதற்குக் காரணம் அவர்கள் தமிழ்நாட்டு அரசர்களோடு சேர்ந்து கொண்டு களப்பிரர்களைப் போலத் தங்களையும் வெளியேற்றி விடுவார்கள் என்று எண்ணிய அச்சத்தின் விளைவாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும், கோயில்களில் வடமொழி வேதங்கள் ஓதவும் வைதிகப் புராணங்கள் சொல்லவும் கட்டளைகள் பல்லவர்களாற்றான் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டன என்று ‘தமிழர் சமய வரலாறு’ என்ற நூலில் முனைவர் மா.இராசமாணிக்கனார் கூறுகின்றார்.
பல்லவர்கள் வடபுலத்திலிருந்து கூட்டங்கூட்டமாக வடமொழி வல்ல பிராமணர்களை அழைத்து வந்து நிலமும் வீடும் இறையிலியாகத் (வரியில்லாத நிலம்) தந்து, அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்த செய்தியைத் தண்டன் தோட்டச் செப்பேடு தெரிவிக்கிறது. ‘ஸ்தானுகுண்டா’ என்ற இடத்தில் 32 வேதியர் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. கும்பகோணத்தின் அருகிலும் நாகப்பட்டினப் பகுதியிலும் இரண்டாம் நந்திவர்மன் வேதியர்களைக் குடியேற்றிய செய்தியும் தண்டன் தோட்டச் செப்பேட்டில் உள்ளது. தண்டன் தோட்டம் என்னும் ஊருக்கு மேற்கே இருந்த ஊரைத் தயாமுகமங்கலம் எனமாற்றிப் பெயரிட்டதுடன்,தயாமுகன் என்னும் வடநாட்டுப் பிராமணன் விருப்பப்படி, மூன்று வேதங்களும் ஸ்மிருதிகளும் வல்ல வடநாட்டுப் பிராமணர் முந்நூற்று எண்மரைக் குடும்பத்துடன் குடியேற்றிய செய்தியும் தண்டன் தோட்டச் செப்பேடே தெரிவிக்கின்றது.
களப்பிரர்கள் ஆட்சியில் சமணர்கள் வழித் தமிழும், தமிழ்ச் சமயமும் சிதைந்த நிலையில் புதிதாய் வந்த பல்லவர்களால் பச்சை வைதிகக் கொள்கையும் பச்சையான வடமொழி வீச்சும் தமிழ்நாட்டில் பரவிய பொழுது தமிழர்களுக்குப் பல்லவர்களின் இப்போக்கு முற்றுமுழுதாய் ஓர் அயன்மையாகவேப்பட்டது.
காலங்காலமாய் உரிமையுடன் கருவறை சென்று தாம் தமிழில் வழிபட்டு வந்த கோயில்களில் வடமொழி மட்டுமே ஓதப்பட்டு முற்றும். அயலான வேள்விகளைச் செய்யும் வடநாட்டுப் பிராமணர் செல்வாக்கு மேலோங்கிய பொழுது தமிழ்மக்களுக்கு வெறுப்பு இவற்றின்மேல் ஏற்படவே செய்தது. இத்தகைய உணர்வலைகள் தமிழ்நாட்டில் இருந்த நிலையிற்றான் ஞானசம்பந்தர் தமிழர்தம் கோயில்தோறும் சென்று தமிழ்ப்பாடல்களைப் பாடிப் புதியதோர் எழுச்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார்.
“பேர்கொண்ட பார்ப்பான் பிரார்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே”
எனும் திருமூலர் பாடலில் வடமொழியில் சிவனை வழிபாடு செய்தல் கண்டிக்கப்படுகிறது. ஞானசம்பந்தர், தன்னைத் தமிழின் காவலனாகப் பறைசாற்றிக் கொண்டு இனிய இசையில் தமிழ்பாடல்களைப் பாடியபொழுது மக்களெல்லோரும் அவர்பின் திரண்டனர்.
“நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன்
தலைமக னாகி நின்ற தமிழ்ஞான சம்பந்தன்
பழுதில் இறைஎழுதுமொழி தமிழ்விரகன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன்”
எனப் பல பாடல்களில் ஞானசம்பந்தன் தன்னைத் தமிழோடு உறவுபடுத்திப் பாடுகின்றார். தமிழின் அருமையையும் ஞான சம்பந்தர் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தார். “மறைஇலங்குதமிழ்” “பரவிய செந்தமிழ்” “சங்கம் மலி செந்தமிழ்” என இவ்வாறாக ஞானசம்பந்தர் தமிழை 500 க்கும் மேற்பட்ட இடங்களில் போற்றிப்புகழ்ந்து உரைத்துள்ளார்.
ஞானசம்பந்தர், சமணம் பரவி நின்ற பாண்டிநாட்டிலேயே மங்கையர்க்கரசியார் துணையுடன் சமணத்தைப் பெரிதும் எதிர்த்து அங்கு சைவத்தை வளர்த்தவர் என்றும் அறிகிறோம். இந்நிலையில் சமணம் பரவியிருந்த இடங்களில் மீண்டும் தமிழின் மூலம் வைதிகமாய் இருந்த சைவம் உள்நுழைந்து இங்கும் தம்மை ஊன்றி வைத்துக் கொண்டது.
இந்த பதிவில் பகுதியளவு பொய்மை உள்ளது.அதற்கு மாற்று கருத்து இதோ.
ReplyDeleteசிவ பெருமானின் குழந்தை முருகன் தான் சேயோன்.சேய் என்றால் குழந்தை.
குறிஞ்சி நில மக்கள் இவரையே தொழுதனர்.
மால் என்னும் சொல் திருமாலை தான் குறிக்கும்.கருமை என்னும் பொருள் இல்லை..